தகவல் அறியும் சுதந்திர சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறுவதில் விண்ணப்பதாரர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து, 2017-2019 காலகட்டத்தில் தகவல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட முறையீடுகள் எண்ணிக்கை 571 ஆகும். அதிக முறையீடுகள் ‘நிறுவன வெளிப்படைத்தன்மை’ தொடர்பானவை ஆகும் என்று இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் குறித்த பகுப்பாய்வை முன்வைத்து பேசிய வழக்கறிஞர் அஸ்வினி நடேசன் வீரபாகு கூறினார். தாக்கல் செய்யப்பட்ட முறையீடுகளில் 373 வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பானவை என்றும் அநேக முறையீடுகள்  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விண்ணப்பதாரர்களுக்கு உரிய நேரத்தில் தகவல்களை வழங்கத் தவறியது மற்றும் தகவல்களை வழங்க மறுத்ததன் அடிப்படையில் அமைந்தவை என்று அவர் கூறினார். கொழும்பில் திங்கள்கிழமை (28) நடைபெற்ற ‘தகவல் அறியும் உரிமை சட்டம் – சாதனைகள் மற்றும் சவால்கள்’ குறித்த திறந்த உரையாடலில் கலந்துகொண்டு தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் ஒளிபரப்பு தொடர்பாடல் தொடர்பான உரையொன்றை வழங்கிய போதே இந்திய வழக்கறிஞர் அஸ்வினி நடேசன் வீரபாகு இந்த தகவலை வெளியிட்டார்.

சர்வதேச தகவல் தினத்தை முன்னிட்டு கொழும்பு 5, நாரஹேன்பிட்ட, பெர்னார்ட் சோய்சா மவத்தை இல. 96 இல் அமைந்துள்ள இலங்கை பத்திரிகை நிறுவனம் கேட்போர் கூடத்தில் சுதந்திர ஊடக இயக்கம் இந்த உரையாடலை ஏற்பாடு செய்திருந்தது.

மேலும் கருத்து தெரிவிக்கையில், அவர்:

“பொருளாதார வெளிப்படைத்தன்மை நிறுவன வெளிப்படைத்தன்மை என்று கருதப்படுகிறது. பொது அதிகாரிகளின் முடிவெடுக்கும் செயல்முறை, பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் செலவினம், கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான தகைமைகள், சலுகைகள் மற்றும் உரிமைகள் ஒதுக்கீடு அளவுகோல்கள், உள்கட்டமைப்பு திட்டங்களின் நிலை மற்றும் மேம்பாடு, சம்பள விவரங்கள், குற்றம் போன்றவற்றுடன் தொடர்புடைய முக்கியமான ஆவணங்களை வெளியிடுவதில் இது கவனம் செலுத்துவதாக இருக்கின்றது. ‘ஊழல்’ மூலம் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, நிதி தவறாகப் பயன்படுத்துதல், வளங்களை ஒழுங்கற்ற முறையில் ஒதுக்கீடு செய்தல் மற்றும் தவறாக நிர்வகித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி முதன்மையாக இந்தியாவின் ராஜஸ்தானில் தேவை மற்றும் வழங்கல் அம்சங்களை பகுப்பாய்வு செய்வதை அடிப்படையாகக் கொண்டது.

ஆணைக்குழுவின் முக்கிய முடிவுகளை கருத்தில் கொள்கையில், அகுரேகொட பாதுகாப்பு தலைமையகத்தை நிர்மாணிக்கும் போது ஆலோசனை வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகளில் பெரிய முரண்பாடுகள் இருப்பது தொடர்பான வழக்கு முக்கியமானது. பாதுகாப்பிற்கான விதிவிலக்கை கருத்தில்கொள்ளாது, அதிகப்படியான கட்டணத்தை திருப்பிச் செலுத்துமாறு பாதுகாப்பு அமைச்சின் தொடர்புடைய ஆலோசனை நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றால் இது எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது.

தேசிய விமான நிறுனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அதன் மனிதவள மற்றும் வணிக அதிகாரி ஆகியோர் தேசிய விமான நிறுவனம் மற்றும் தேசிய விமான நிறுவனங்கள் தொடர்பாக கையெழுத்திட்ட பல ஒப்பந்தங்கள் குறித்த தகவல்களையும் விமானிகள் சங்கம் கோரியது. ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின் பேரில் தொடர்புடைய தகவல்கள் வழங்கப்பட்டன. அதன்படி, சம்பளம் மற்றும் பிற ஒப்பந்தங்களை வெளியிட ஆணையம் உத்தரவிட்டது. தனியார் விதி மற்றும் பிற அரசுகளுடனான  நம்பிக்கைக்கு சேதம் போன்ற விதிவிலக்குகள் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கவில்லை.

மத்திய அரசின் பொது அதிகாரிகளுக்கு எதிராக 783 முறையீடுகளைப் ஆணைக்குழு பெற்றுள்ளது. மாகாண மட்டத்தில் 259 முறையீடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. பிரதேச செயலக மட்டத்தில் 142 சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில், 14 நாட்களுக்குள் கொடுக்கப்பட்ட பதில்களின் சதவீதம் 31% -34% க்கு இடையில் உள்ளது. 28 நாட்களுக்கு இடையில் கொடுக்கப்பட்ட பதில்களின் விகிதம் 18% -27% ஆகும்.

மேல்முறையீடுகளின் காரணமாக ஆணைக்குழு தீர்ப்பு வழங்கிய எண்ணிக்கை 87% ஆகும். 16% முறையீடுகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.”

கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றிய சுதந்திர ஊடக இயக்கத்தின் தலைவர் சீதா ரஞ்சனி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிவகுத்த போராட்டம் குறித்து பேசினார். சுதந்திர ஊடக இயக்கம் ஆரம்பத்தில் இருந்தே அதற்காக போராடிய வரலாற்றை அவர் விளக்கினார்.

மூன்று இளம் பத்திரிகையாளர்களான ராகுல் சமந்தா ஹெட்டியாராச்சி, சிவகுமாரன் மற்றும் இந்தூனில் உஸ்கொட ஆராச்சி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்கள் சார்பாக தகவல் சட்டத்தைப் பயன்படுத்துவதில் தங்களது அனுபவங்களை விவரித்தனர்.

தகவல் சட்டத்தின் கீழ் தகவலுக்கு விண்ணப்பிக்கும் ஊடகவியலாளர்களை குற்றவாளிகளாக கருதி அவர்களை போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தும் போக்கு நாட்டில் உள்ளது என்று மின்னணு மற்றும் அச்சு ஊடகத் துறையில் 18 ஆண்டுகள் அனுபவம்வாய்ந்த பத்திரிகையாளர் ராகுல் சமந்தா கூறினார். அவர் சமீபத்தில் வவுனியா பகுதிக்கு பொறுப்பான எஸ்.எஸ்.பி யிடம் தகவல் கோரியதாகவும், அதற்கு பதிலளிக்கும் விதமாக வவுனியா போலீஸ் குற்றவியல் புலனாய்வு பிரிவு அவர் குறித்து சிறப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில், கிட்டத்தட்ட 1150 பொது அதிகாரிகளிடமிருந்து தகவல்களைத் பெற விண்ணப்பித்ததாகவும் அவற்றில் 174 க்கு மட்டுமே விண்ணப்பம் கிடைத்ததாக பதில் கிடைத்தது என்று தெரிவித்தார். தகவல்களை வழங்க மறுக்கப்பட்டதற்கு எதிராக சுமார் 150 முறையீடுகளை தகவல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும், அவற்றில் சில இன்னும் விசாரணையில் உள்ளன என்றும் அவர் கூறினார்.

வீரகேசரி பத்திரிகையின் உதவி ஆசிரியர் சிவகுமாரன் தனது அனுபவத்தை வெளிப்படுத்துகையில், 2010 ஆம் ஆண்டில் இருந்து புத்தாண்டு தினத்தன்று ஜனாதிபதியின் வாழ்த்து செய்தியைத் தாங்கிய  தொலைபேசி குறுஞ்செய்திகளுக்கு யார் பணம் செலுத்துகிறார்கள் என்பதைக் கண்டறிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (டி.ஆர்.சி) ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்ததாகக் கூறினார். தனது தனிப்பட்ட தொலைத் தொடர்பு இலக்கங்களை தனது அனுமதியின்றி ஜனாதிபதிக்கு வழங்கியது யார் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் விசாரித்ததாக அவர் கூறினார். சம்பந்தப்பட்ட தகவல்களை வழங்குவதற்கு பதிலாக, ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவர் தனது ஆசிரியரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரைப் பற்றி விசாரித்ததே  உடனடி பதிலாக இருந்தது என்றும் சிவகுமாரன் தெரிவித்தார்.

மேலும், ஹட்டன் பகுதியில் உள்ள, அருகிலுள்ள ஏராளமான பாடசாலைகள் விளையாட்டு மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் ஒரு பொது அரங்கத்தில் அவ்வப்போது நடைபெறும் பொது தகனம் குறித்து விசாரித்தபின், இதுபோன்ற தகனங்களை இனி அனுமதிப்பதில்லை என்று ஹட்டன் நகராட்சி மன்றம் முடிவு செய்துள்ளது, என்றும் சிவகுமாரன் கூறினார்.

ராவய சிங்கள பத்திரிகையாளர் இந்துனில் உஸ்கொட ஆராச்சி உரையாற்றுகையில் ரயில் மோதல்களால் அதிகரித்து வரும் யானைகளின் இறப்பு குறித்து ரயில்வே துறையிடம் விசாரித்த பின்னர், தற்போது செயல்பாட்டில் உள்ள அனைத்து 40 என்ஜின்களிலும் வேகமானிகள் இல்லை என்பது கண்டறியப்பட்டதாக கூறினார். இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவில் அதிக ஆபத்துள்ள ரசாயனங்கள் இருப்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக தான் மேற்கொண்ட புலனாய்வில்,  சந்தேகத்திற்கிடமான பால் பவுடரின் மாதிரிகளை ஜெர்மனிக்கு அனுப்பி நடத்திய ஆய்வில் இதுபோன்ற அபாயகரமான இரசாயனங்கள் இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும், செய்தி ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிடவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

திறந்த கலந்துரையாடலில் பங்கேற்ற பல ஊடகவியலாளர்கள் தகவல் சட்டத்தைப் பயன்படுத்துவது தொடர்பான தமது அனுபவங்கள் குறித்தும், பொதுமக்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்தும் கருத்து தெரிவித்தனர்.

 

சுதந்திர ஊடக இயக்கம்