சுகாதாரத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்குச் சுகாதார செயலாளரினால் வெளியிடப்பட்ட முன்னெச்சரிக்கை கடிதமானது தொற்றுநோய் தொடர்பான உண்மை தகவல்களை மறைக்கும் முயற்சியாகும்.
வெகுசன ஊடகங்களின் செய்தி வெளியிடுதல் தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு தாக்கத்தை விளைவிக்கும் ஸ்தாபன விதிக் கோவைகளை மேற்கோள்காட்டி, அவற்றை புறக்கணிக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரியப்படுத்தும் சுகாதாரத் துறை செயலாளரினால் ஒப்பமிட்ட அச்சுறுத்தல் கடிதம் சகல சுகாதாரத் துறைகள் நிறுவனங்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கொவிட்-19 தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் வெவ்வேறு மூலாதாரங்களின் அடிப்படையில் தொற்று சம்பந்தமான உண்மை தகவல்களை பெற்றுக்கொள்வதற்காகக் காணப்படும் வாய்ப்புக்களை மட்டுப்படுத்தி தகவல் உரிமையை மீறும் குறித்த செயற்பாட்டை சுதந்திர ஊடக இயக்கம் கண்டிப்பதுடன் தமது அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்கின்றது.
இத்தகைய எச்சரிக்கை செயற்பாடுகளின் மூலம் அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை இழப்பதோடு,மற்றும் வெகுசன ஊடகங்கள் பல்வேறு மூலாதாரங்களிலிருந்து தகவல்களை பெறுவதற்காக காணப்படும் உரிமையை தடுக்கின்ற செயற்பாடாகக் குறித்த நடவடிக்கை காணப்படுகின்றமை கவனிக்கத்தக்கதாகும். மேலும் அரச ஊழியர்களின் தொழிற்சங்க செயற்பாடுகள் மற்றும் ஒன்றுசேர்வதற்கான உரிமை போன்றவை மோசமாகப் பாதிப்புக்கு உள்ளாகின்றமையும் குறிப்பிடத்தக்கது . கருத்துச் சுதந்திர உரிமை என்பது ஸ்தாபன விதிக்கோவைகளுக்கு காணப்படும் அங்கீகாரத்தையும் விட இலங்கை அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமையாகும்.மேலும் தகவல் உரிமை என்பது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமையாகக் காணப்படுவதுடன் , 2016 முதல் அமுலுக்கு வந்த தகவல் தெரிந்து கொள்ளும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் தொடர்பான கொள்கை ரீதியான புதிய பார்வை தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.ஆகவே , காலாவதியான ஸ்தாபனக் விதிக்கோவை மறுசீர மைப்பு செய்ய கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதுடன் ,அதற்கு நேரதிராக குறித்த ஸ்தாபன விதிக்கோவைகளை பயன்படுத்தி பொதுமக்கள் சார்பாக தங்களிடம் காணப்படும் தகவல்களை வெளிப்படுத்தும் அரச அதிகாரிகளை அடக்கும் கருவியாக பயன்படுத்தக்கூடாது என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
கொவிட் 19 தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை தொடர்பாகச் சுகாதாரத் துறையில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் சங்கத் தலைவர்கள் அவர்களுக்குத் தெரிந்த தகவல்கள், சிக்கல்கள் மற்றும் பரிந்துரைகளை மக்களுக்கு வெளியிட்டுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். சுகாதார கொள்கைகள் முறையாக நடைமுறைப்படுத்தத் தவறும் சந்தர்ப்பத்தில் , மக்களுக்கும் நாட்டிற்கும் பெரும் சிரமமாக மாறியுள்ள இத்தகைய தொற்றுநோய் சூழ்நிலையில் குறித்த சிக்கல்கள் கண்டறியப்பட்டுச் சரியான பாதையில் சுகாதார கொள்கைகளை வழிநடத்த வேண்டும். காலாவதியான விதிகளை அகற்றுதல் மற்றும் அனைத்து அதிகாரிகளும் சமூகப் பொறுப்புடன் செயல்படுவதை உறுதி செய்தல் போன்ற காரணிகளை உள்ளடக்கிய இக்கட்டான சூழ்நிலையை நாடு எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். சுகாதார செயலாளர் குறிப்பிடும் தகவல்களுக்கு அமைய செயற்படுவதாயின் ,உண்மை தகவல்கள் காணப்படும் சந்தர்ப்பத்தில் அதைப் பொதுமக்களுக்கு மறைத்து, பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதில் எந்த பயனும் இல்லை என்பதை சுகாதாரதுறை செயலாளர் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆகவே, சுகாதாரத் தொழிற்சங்கங்கள் மற்றும் தங்களது தகவல்களை ஊடகங்களுக்கு முன்வைக்கும் பிற அதிகாரிகள் தவறான தகவல்களையும் தரவுகளையும் முன்வைப்பதாகக் குற்றம் சாட்டுவதன் மூலம் ஸ்தாபன விதிக்கோவை பயன்படுத்தி அரச அதிகாரிகளை அடக்க முயல்வதைத் தவிர்க்குமாறு சுதந்திர ஊடக இயக்கம் சுகாதார செயலாளரையும் பிற அதிகாரிகளையும் கேட்டுக்கொள்கிறது.