கருத்து சுதந்திர உரிமையை பாதிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் தவிர்த்துகொள்ள வேண்டும்
சிங்கராஜ வனப்பகுதிக்கு அருகாமையில் இடம்பெறும் காடழிப்பு தொடர்பில் இறக்குவான பகுதிய சேர்ந்த பாக்யா அபேரத்ன எனும் இளவயது யுவதி தெரிவித்திருந்த கருத்துக்கு எதிராக செயல்படும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் காவல்துறையினறின் நடவடிக்கையானது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்நடவடிக்கையானது கருத்துரிமையை மீறும் நடவடிக்கையாக சுதந்திர ஊடக இயக்கம் கருதுவதுடன் தமது கண்டனத்தையும் தெரிவித்துகொள்கின்றது.
சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “லக்சபதி” நிகழ்ச்சியில் பங்கேற்ற பாக்யா அபேரத்ன யுவதி தமது கிராமத்தில் நடைபெற்று வரும் காடழிப்பு குறித்து தனது கவலை, அதிருப்தியை தெரிவித்தமை குறிபிடத்தக்கது. இதற்கு அடுத்த நாள் ,குறித்த யுவதி தெரிவித்த கருத்தில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை என்பதாக வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து இறக்குவானை காவல்துறையை சேர்ந்த இரு “ஆண்” அதிகாரிகள் குறித்த யுவதியின் வீட்டிற்கு சென்று அவருக்கு யார் அப்படியான கருத்துக்களை தெரிவிக்க கோரியது என்று வினவியதுடன் அது குறித்து அறிக்கையிட்டும் சென்றுள்ளனர். குறித்த யுவதி தெரிவித்த சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காடழிப்பு விடயம் தொடர்பாக உரிய முறையில் விசாரித்து காடழிப்பு நடவடிக்கைக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, காடழிப்பு செயல்பாட்டை சுட்டிகாட்டிய நபருக்கு எதிராக செயல்படுவது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று குறித்த யுவதி குறித்து கடுமையான தண்டனை வழங்கவேண்டும் போன்ற கோரிக்கைகள் மற்றும் அச்சுறுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பரவும் பதிவுகள் காரணமாக கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்திற்கு தடை ஏற்படுவதுடன் கருத்து தெரிவிக்கும் நபரின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் செயலாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒரு ஜனநாயக சமூகத்தில் மக்களை பாதிக்கும் ஏதேனும் செயல்பாடு அல்லது நிகழ்வு தொடர்பில் கருத்து தெரிவிப்பது ஒரு சமூக பொறுப்பாக காணப்படுகின்றது. வேறுபட்ட கருத்துக்களை முன்வைக்கும் போது நூறு சதவீதம் அக்கருத்து உண்மையானதாக காணப்பட வேண்டியதில்லை என்பதை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மூலம் காணக்கூடியதாக உள்ளது. எவ்வித தயக்கமோ பயமோ இன்றி அரச கொள்கை மற்றும் செயற்பாடுகளை விமர்ச்சிக்கவும் அது குறித்து கேள்வி எழுப்பவும் காணப்படும் குடியியல் உரிமையை இளைய தலைமுறையினர் உரிய முறையில் பயன்படுத்துவது தொடர்பில் பாராட்டப்பட வேண்டியதுடன்,உலகெங்கிலும் உள்ள நாகரிக சமூகமானது விசேடமாக குழந்தை மற்றும் இளவயதினர்களின் இத்தகைய கருத்து வெளிப்பாடுகளை ஊக்குவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
ஜனநாயக சமுதாயத்தில் கருத்து தெரிவிக்கும் உரிமை மற்றும் மாற்றுக்கருத்துக்களை சமூக பொறுப்புடன் செயல்படுத்துதல் மற்றும் அதன் எல்லை,நோக்கங்களை விரிவுபடுத்துதல் போன்றவை குடிமக்களின் உரிமையாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. கருத்து தெரிவிக்கும் உரிமை மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு மதிப்பளித்தல் மற்றும் அதனை பாதுகாத்து போசிப்பதும் அரசியலமைப்பு ரீதியாக மற்றும் ஒழுக்கவியல் ரீதியாக அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரிகளினதும் தார்மீக கடப்பாடாகும் என்பதை சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டுவதுடன் , கருத்து தெரிவிக்கும் உரிமையை தடுக்கும் செயல்பாடுகளில் இருந்து விலகி இருக்குமாறும் வலியுறுத்துகின்றது .