• ஊடக அமைப்புகளின்  கூட்டமைப்பு

 

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவில் அமைந்துள்ள  சர்வதேச ஊடக அலுவலகங்கள் சேதமாகியுள்ளதுடன் ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய அச்சுறுத்தல் நிலவுகின்றமை அவதானிக்கத்தக்கதாகும். சர்வதேச ஊடக நிறுவனங்களின் செய்தி அறிக்கைக்கு அமைய மே 13 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில், உள்நாட்டு ஊடக நிறுவனங்கள்,அல்ஜசீரா மற்றும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு காஸாவில் இயங்கி வரும் அஸோஸியேடட் பிரஸ் உட்பட 15 ஊடக நிறுவனங்கள் அமைந்துள்ள Al-Shorouk கோபுரம் முற்றிலுமாக தகர்க்கப்பட்டதுடன் ஊடக உபகரணங்களும் சேதமடைந்துள்ளன. மேலும் மே மாதம் 11 ஆம் திகதி Al-Jawhara கோபுரம் மீதான தாக்குதலில் சுமார் 13 ஊடக நிறுவனங்கள் சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.குறித்த கோபுரங்களில்  ஊடக நிறுவனங்கள் அமைந்துள்ளமை அறிந்திருந்தும்  ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை  அச்சுறுத்தலுக்கு உட்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையை “ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு” தமது கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றது.

 

இரண்டாவது ஜெனீவா உடன்படிக்கையின் 13 வது பிரிவை மீறி காஸா மீதான இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் ஷெல் மற்றும் ராக்கெட் தாக்குதல்களில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்படுதல் அல்லது காயமடைதல் சம்பவங்களானது மிகவும் கண்டிக்கக் கூடிய நடவடிக்கைகளாக காணப்படுகின்றன. மேலும் தகவல்களை உலகுக்கு கொண்டு செல்வதற்காக  ஊடகவியலாளர்களுக்கு காணப்படும் உரிமையை மீறும் செயற்பாடாகவே ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் நடவடிக்கையானது அடையாளம் காணப்படுகின்றது. ஆகவே காஸா பகுதியில் நடைபெறும் இவ்வகையான  தாக்குதல் சம்பவங்களானது, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக துறை சார்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாகும். மேலும் சர்வதேச ஊடக அசெய்திகளுக்கு அமைய இஸ்ரேல் நாட்டு ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றமை கவனிக்கத்தக்கதாகும். தாக்குதலுக்கு உள்ளான மற்றும் அச்சுறுத்தலுக்கு  உள்ளான சர்வதேச ஊடக நிறுவனங்களின் இலங்கை கிளையில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கு தமது உணர்வுபூர்வமான சகோதரத்துவத்தை  “ஊடக  அமைப்புகளின்  கூட்டமைப்பு” பகிர்ந்துக் கொள்வதுடன், இஸ்ரேல்- பலஸ்தீன் மோதல் காரணமாக பாதிப்புக்குள்ளான ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சர்வதேச ஊடகங்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் உட்பட சர்வதேச சமூகத்தையும்  கேட்டுகொள்கின்றோம்.